கிறு, கின்று – பெருமாள் முருகன்

 

இலக்கிய விமர்சனக் கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதியவர் நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்.  ‘சில கதைகள் பழைய இலக்கியச் செய்திகளை நினைவுபடுத்துகிறவை’ என்று ஒரு தொடர். ‘நினைவுபடுத்துகின்றவை’ என்றல்லவா வர வேண்டும்? சரி, அச்சுப்பிழையாக இருக்கக் கூடும் எனக் கருதி மேலே படித்தேன். இன்னோரிடத்தில் ‘ஒருவருக்கு ஈர்ப்பூட்டுகிறவை எல்லோரையும் ஈர்க்கும் எனச் சொல்ல இயலாது’ என்றொரு தொடர். ‘ஈர்ப்பூட்டுகின்றவை’ என்பது தானே சரி? கண்ணோட்டினால் ‘பேசுகிறவை’, ‘விவரிக்கிறவை’ என்றெல்லாம் கண்ணில் பட்டன. நவீன உரைநடையில் இப்படி எழுதும் வழக்கம் கூடி வருவதை நான்தான் கவனிக்கவில்லையோ?

‘சில கதைகள் பழைய இலக்கியச் செய்திகளை நினைவுபடுத்துபவை’ என்று எழுதினால் இயல்பாக இருக்கும். ஈர்ப்பூட்டுபவை, பேசுபவை, விவரிப்பவை என்றிருந்தால் வாசிப்புக்கு எளிது. எதிர்கால இடைநிலையாகிய ‘ப்’, ‘வ்’ ஆகியவை பயின்று வரும் வினையாலணையும் பெயர்கள் இவை. ‘நினைவுபடுத்துகிறவை’ என்றால் ‘கிறு’ என்னும் நிகழ்கால இடைநிலை பெற்று வருகிறது. கிறு, கின்று, ஆநின்று ஆகிய மூன்றையும் நிகழ்கால இடைநிலை என்கிறது மரபிலக்கணம். வருகிறான் (கிறு), வருகின்றான் (கின்று), வாராநின்றான் (ஆநின்று) ஆகிய மூன்றும் ஒரே பொருள் தருவன.

‘ஆநின்று’ இப்போது வழக்கொழிந்து போயிற்று.  ‘நடவாநின்றான்’ என்றால் ‘நடக்கின்றான்’ என்று பொருள். உரையாசிரியர்கள் எழுதிய உரைநடையில் கூறாநின்றான், பேசாநின்றான், நடவாநின்றான் எனப் பலவற்றைக் காண முடியும். இன்று இவை எதிர்மறைப் பொருள் தருவனவாக மாறிவிட்டன. ‘நடவாநின்றான்’ என்றால் ‘நடக்காமல் நின்றான்’ என்று அர்த்தம் வந்துவிடும். இக்குழப்பத்தின் காரணமாகத்தான் ஆநின்று வழக்கொழிந்து போயிருக்க வேண்டும்.

கிறு, கின்று ஆகிய இடைநிலைகளே இன்றைய மொழியில் பயன்படுகின்றன. இவற்றைப் பொதுவாக நிகழ்கால இடைநிலைகள் என்று இலக்கணம் கூறுகின்றதே தவிர வரையறைக்கு உட்படுத்தவில்லை. உரையாசிரியர்களும் வரையறைப்படுத்தலில் ஈடுபடவில்லை.

கின்று ஐம்பால் மூவிடங்களிலும் வரும் இடைநிலை. வருகின்றேன் (தன்மை), வருகின்றாய் (முன்னிலை), வருகின்றான் (படர்க்கை – ஆண்பால்), வருகின்றாள் (படர்க்கை – பெண்பால்), வருகின்றார் (படர்க்கை – பலர்பால்), வருகின்றது (படர்க்கை – ஒன்றன்பால்), வருகின்றன (படர்க்கை – பலவின்பால்) எனக் கின்று வரும்.

கிறு அப்படியல்ல. வருகிறேன், வருகிறாய், வருகிறான், வருகிறாள், வருகிறார், வருகிறது ஆகியவற்றில் கிறு வரும். வருகிறன என்றால் அது தவறு. பலவின் பாலில் ‘கிறு’ வராது. நடக்கிறது என்பதன் பன்மை நடக்கிறன அல்ல; நடக்கின்றன என்பதுதான். வருகிறது என்பதன் பன்மை வருகிறன அல்ல; வருகின்றன என்பதுதான்.

பலவின் பாலில் கிறு வராது; கின்று மட்டும்தான் வரும். கின்று ஐம்பால் மூவிடங்களிலும் வரும் இடைநிலை; கிறு பலவின்பால் தவிர நாற்பால் மூவிடங்களில் வரும் இடைநிலை  என வரையறைப்படுத்த வேண்டும்.

கிறு, கின்று

நினைவுபடுத்துகிறவை, ஆர்வமூட்டுகிறவை என்பன பிழை. நினைவுபடுத்துகின்றவை, ஆர்வமூட்டுகின்றவை என்பனவே சரி. அவற்றைக்கூட நினைவுபடுத்துபவை, நினைவுபடுத்துவன என எழுதலாம். ஆர்வமூட்டுபவை, ஆர்வமூட்டுவன என எழுதலாம். தமிழ் மொழியே தம் கருவி எனக் கருதும் எழுத்தாளர்கள் இன்னும் கொஞ்சம் கவனம் கொண்டால் நல்லது.

தலை கிறுகிறுக்கிறதா? கிறுகிறுக்கிறது என்று எழுதலாம். ‘தலைகள் கிறுகிறுக்கிறன’ என்று எழுதிவிடக் கூடாது. கிறுகிறுக்கின்றன என்று எழுதுவதே சரி.

—–    06-11-24

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Muththarasi.org