மெய்கண்டார் காட்டும் அத்துவிதம்

      மெய்கண்டார் காட்டும் அத்துவிதம்
                       க.கு.இராணி,
             முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
                 தியாகராசர் கல்லூரி,மதுரை-9.
 மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவது சமயமாகும். உலகில் தோன்றியுள்ளச் சமயங்கள் பலவாகினும் அவற்றின் குறிக்கோள் ஒன்றாகவே அமைந்துள்ளது. அத்தகு குறிக்கோள் உயிர் இறைவனது திருவடியைப் பற்றுவதாகும். இறைவனது திருவடியைச் சேர்தலின் அவசியத்தைப் “பற்றுக பற்றற்றான் தாளினை” என வள்ளுவரும் உணர்த்தியுள்ளார். அவ்வாறாயின் இறைவனது திருவடியைச் சென்றடைந்த உயிரின் நிலை எவ்வாறு இருக்கும்? என்பது பலரின் வினாவாக அமைந்துள்ளன. இத்தகு வினாவிற்குரிய விடையைச் சமயங்களில் உள்ளாகவே காணவேண்டியுள்ளது. இறைவனது திருவடியைச் சென்றடைந்த உயிரின் நிலை ‘வேறற்று’ இருக்கும் என்பர் சித்தாந்த நூலாசிரியர். இந்நிலைக்கு ‘அத்துவிதம்’ என்றும் பெயர் கூறுவர். தனித்தும், பிரித்தும் பெயர் கூற இயலாதத் தன்மையுடன் இருக்கும் நிலையை ஒத்ததாகும் என்றும் பொருள் வழங்குவர். இவ்வாறு அத்துவிதத்திற்கானப் பொருள் நிலைப் பல்வேறு நிலையில் பலவிதமான விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு விளக்கி வரும் சமயங்கள் வைணவம், சமணம், பௌத்தம், சைவம் என்பனவாகும்.
 பொதுவாக கடவுள் உண்மையை ஏற்றுக்கொள்ளும் கருத்தில் பல்லேறு சமயங்களுக்கிடையே பலவித வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவற்றுக்குள்ளும் ‘அத்துவிதம்’ என்பதற்குள் பொருள் காண்பதில் தான் வேறுபாடு மிகவும் காணப்படுகின்றது. அத்துவிதத்தில் தோன்றிய வேறுபாட்டின் காரணமான கேவல அத்வைதம்(சங்கரர்), விசிஷ்ட அத்வைதம்(இராமானுசர்), துவைதம்(மத்துவர்) என்ற மூன்று கோட்பாடுகள் உருவாகின என்பர் தத்துவநூலார். தமிழ் நாட்டின் தென்பகுதியினரான இம்மூவரும் உபநிடதங்களையும், பிரம்ம சூத்திரத்தையும், பகவத் கீதையையும் சிறந்த பிரமாண நூல்களாகக் கொண்டனர். இராமானுசர் வைணவ திவ்யபிரபந்தங்களையும் உடன் கொண்டிருந்தார். இவர்களைத் தவிர ‘சுத்த அத்வைதம்’ என்ற அத்வைதத்தைத் தென் பகுதியைச் சார்ந்த மெய்கண்டார் எடுத்துக்காட்டியுள்ளார். இவர் உபநிடதத்தைப் பொதுவாகவும், சிவாகமம், திருமுறை, திருக்குறள் முதலானவற்றைப் பிரமாண நூல்களாகச் சிறப்பாகவும் கொண்டனர். இவரது கொள்கை ‘சித்தாந்த சைவம்’ எனப்படும். இவர் சொன்ன சுத்த அத்வைதமே உண்மையான அத்வைதம் என்பதும் மற்றையோர் கூறியன உண்மையானவை அல்ல என்பதும் மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்துக்கு மாதவஞ் சிவஞான முனிவர் அருளிய சிவஞான மாபாடியம் என்னும் உரையில் நன்கு விளக்கி எழுதப்பட்டுள்ளன. ஆதலால் சைவசமயத்தின் அருளாளராகத் திகழும் மெய்கண்டார் காட்டும் அத்துவித விளக்கமே சரியானதாகும் என்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது. 

அத்துவிதம்
அத்துவிதம் என்பது இரண்டு பொருள்கள் இருந்தும் இரண்டு என்று கூற இயலாதப்படி ஒன்றாவதைக் குறிப்பதாகும். கண்ணால் காணக்கூடியப் பருப்பொருளில் இத்தகைய நிகழ்வு ஏற்படுவதில்லை. இந்நிகழ்வு கண்ணிற்குப் புலப்படாத சூக்குமமாய் அமைந்துள்ள அறிவினுள் ஏற்படுவதாகும்.
பேரறிவுடைய இறைவன் உயிர், உலகப் பொருளுடன் வேற்றுமை இல்லாமல் கலந்திருக்கிறான். இவ்வாறு கலந்திருக்கும் நிலையில் இறையும் உயிரும் இரண்டு என்னும் தன்மைத் தோன்றாமல் ஒன்றெனும் தன்மையுடன் இருக்கின்ற நிலையை ‘அத்துவிதம்’ என்பர். ஆதலால் அத்துவிதம் என்பது பொருளால் இரண்டாகவும், கலப்பினால் ஒன்றாகவும் அமைந்திருப்பதைக் குறிப்பதாகும். மேலும் ஒன்று என்று சொல்ல முடியாததாய் இரண்டு – இரண்டாய்த் தோன்றாது இரண்டு என்னும் கருத்தில் ‘அத்துவிதம்’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேவலஅத்வைதமும் சித்தாந்தசைவமும்
சங்கரர் தத்அபாவம் என்னும் இன்மைப்பொருள் கொண்டவர். ந- துவைதம் இரண்டில்லை. ஒன்றுதான் உள்ளது என்பது இவர் கொண்ட பொருளாகும். சங்கரருடையக் கொள்கை ‘ஏகான்மவாதம்’ என்பர் சமயநூலார். அதாவது பரமாத்மா எனப்படும் ஒருபொருள் மட்டுமே உண்டு. அதுவே பிரம்மப் பொருள் என்பர். பொன்னுக்கும் பொன்னாலான ஆபரணங்களுக்கும் எப்படிப் பேதம் சொல்லுதல் இயலாதோ, அப்படியே பிரம்மத்துக்கும் உயிர்களுக்கும் பேதம் சொல்லுதல் இயலாது. இதனையே அபேதவாதம் என்றும் கேவல அத்வைதம் என்றும் கூறுவர். சங்கரருடையக் கூற்றை சைவநூலாசிரியர் பின்வருமாறு மறுத்துப் பொருள் கூறுகின்றனர். அதாவது, இன்மை என்பது பொருளின் இல்லாமையை மட்டுமே உணர்த்தும் பொருளாகும் என மறுத்துள்ளனர். மேலும் ‘ஏகம்’ என்பது நிலையான, தனக்கு மேலான, தனக்கு இணையாக, இன்னொரு பொருளில்லாமல், பிறபொருளின் கலப்பினால் தனது தன்மைக் குறைப்படாமல் இருப்பதைக் குறிப்பதாகும். ஆதலால் இறைக்கும் உயிர்க்கும் இடையே உள்ளத் தொடர்பை ‘ஏகம் – ஒன்று’ எனக் கூறுதல் பொருந்தாது என்பர். ஆதலின் அத்துவிதம் என்பதற்கு இரண்டு இல்லை என்றும் அதன் கருத்து ஒன்று என்றும் பொருள் கொள்வது பொருந்தாது என்பர்.
விசிஷ்டாத்வைதமும் சித்தாந்த சைவமும்
இராமானுசர் சித்(உயிர்), அசித்(உலகப்பொருள்), ஈஸ்வரன்(கடவுள்) என்ற மூன்று பொருள்களும் உண்மைப் பொருளெனக் கொண்டவர். சித்தும் அசித்தும் பிரம்மப் பொருளுக்கு உடம்பு என்றும், பிரம்மப் பொருள் அவ்வுடம்பில் கலந்திருக்கும் உயிர் என்றும் பொருள் கூறுவர். பிரம்மப் பொருளுக்கு சிறப்பிலக்கணம் வகுத்தளித்தவர். இத்தகைய கருத்தெல்லாம் சித்தாந்த சைவத்துடன் ஒன்றியே செல்லினும், அத்துவிதம் இரண்டில்லை என்று இன்மைப்பொருள் கொண்டதால் இவருடையக் கருத்தும் சைவத்துக்கும் பொருந்தாததாகவே உள்ளது என்பர் சைவநூலாசிரியர். மேலும் இறை மற்றும் உயிர்க்கு கூறும் இலக்கணமும், தத்துவத்தின் எண்ணிக்கையும் சித்தாந்தத்திற்கு மாறாகவே உள்ளன. பிரம்மப் பொருளுக்கும், பிரபஞ்சத்துக்கும் உள்ள சம்பந்தம் சொல்லுக்கும், பொருளுக்கும் உள்ள சம்பந்தம் போல் ‘பேதாபேத சம்பந்தம்’ உடையதெனக் கூறுகிறார். இறைவன் உலகாக பரிணமிப்பதால் இறை, உலகம் ‘அபேதம்’ மற்றும் ‘பேதம்’ என்பது இவரது கொள்கையாக அமைந்துள்ளது.
துவைதமும் சிந்தாந்த சைவமும்
மத்துவரும் இன்மைப்பொருள் கொள்கையினராவார். பிரம்மமும் உயிர்களும் பேதப் பொருள்களாகும் என்கிறார். இத்தொடர்பை ‘இருட்டும் வெளிச்சமும் போல்’ என்ற உவமையால் விளக்கம் தருவர். இவ்விரண்டும் எப்பொழுதும் ஒன்றாவதில்லை என்பது இவரது கொள்கையாகும். இறை, உயிர், உலகம் என்ற முப்பொருளுண்டு. அம்முப்பொருளும் தங்களுள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுப்பட்டுள்ளன என்ற மத்துவரின் கருத்து சைவத்திற்கு உடன்பாடுதான் என்றாலும், அத்துவிதம் என்பதற்கு இன்மைப் பொருள் கொண்டதும், இறை உயிர் எப்பொழுதும் ஒன்றாகச் சேர்வதில்லை என்பதும் சித்தாந்த சைவத்துடன் பொருந்தாததாக அமைந்துள்ளது.
மெய்கண்டார் காட்டும் அத்துவிதப் பொருள்
மெய்கண்டார் அன்மைப்பொருள் கொள்கையைக் கொண்டவராவார். அவர் கூறும் அன்மைப் பொருள் ந-துவிதம் இரண்டன்று என்பதாகும். அதாவது இரண்டு பொருள்கள் இரண்டற்று நிற்பதைக் குறிப்பதாகும். ஒன்று போல் தோன்றும் இரண்டு பொருள்கள் உள்ளன என்பதாகும். இரண்டு உண்டு ஆனால் இரண்டு எனல் பொருந்தாது. அவைப் பிரிந்து நிற்றல் இல்லை. ஆகவே கலப்பினால் ஒன்றாகத் தோன்றுகிறது. இந்தச் சிக்கலை நீக்குவதற்குத் தான் ஒன்று (ஏகம்) என்று சொல்லாமல் ‘அத்துவிதம்;’ என்று சொல்லப்பட்டது என்பது மெய்கண்டார் தரும் விளக்கமாக அமைந்துள்ளது. இக்கருத்தினையே மெய்கண்டாரின் மாணாக்கராகிய அருணந்திசிவம் தமது இருபா இருபஃது என்னும் நூலில் “ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றும் இரண்டும் இன்றாகாமல்” (செய்.20) என விளக்கியுள்ளார். இறை, உயிர், உலகம் என்னும் முப்பொருளும் தனதியல்பால் வேறுப்பட்டிருப்பினும் இறைவனின் இருப்பின்றி உலகும் உயிரும் தனித்து செயல்படுவதில்லை. இறைவன் எங்கும் நிறைந்துள்ள வியாபகப் பொருளாவார். உயிரும், உலகும் இறைவனது வியாபகத்தில் ஒன்றாகக் கலந்திருக்கும் வியாப்பியமாகும். இவ்வாறு இரண்டு பொருள் பிரிபின்றிக் கலந்திருக்கும் நிலைக்கு ‘அத்துவித சம்பந்தம்’ எனப்படும். உலகப் பொருளைக் காட்டிலும் உயிர் இறையோடு கலந்திருக்கும் சம்பந்தமே சைவ சித்தாந்தத்தில் சிறப்பாகப் பேசப்படுகிறது. ஏனேனில் உயிரே சிவத்தை உணர்ந்து அனுபவிப்பதற்குரிய சிறப்புடையதாகும்.
மெய்கண்டார் சிவம், சத்தி, ஆன்மா, ஆணவம், சுத்தமாயை ,அசுத்தமாயை என்னும் ஆறு பொருளை அநாதி என்று குறிப்பிடுகிறார். இதில் சிவம், சத்தி குணம் மற்றும் குணிப்பொருளாகும். ஆன்மா வியாப்பியப் பொருளாகும். ஆணவம் வியாப்தி எனப்படும். மாயை கன்மம் சிவத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும். எனவே இவையும் வியாப்பியமாகும். வியாபகப் பொருள் வியாப்பியப் பொருளில் கலந்திருக்கும். வியாப்பியப் பொருள் வியாப்பகப் பொருளைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கும். வியாபகப் பொருள் ஒன்றாய்த் தான் இருக்கும். வியாப்பியப் பொருள் பலவாக இருக்கலாம்.
சிவபெருமான் பெத்த (கட்டுநிலை), சுத்த (முத்திநிலை) என்னும் இருநிலைகளில் உயிருடன் கலந்திருக்கிறான். இவ்விரு நிலைகளில் பெத்த நிலையில் உயிர் முனைத்துத் தெரிகிறது. சுத்த நிலையில் சிவம் முனைத்துத் தெரிவதாய் அமைகிறது. ஆதலால் இறை உயிர் இணைந்திருந்தாலும் ஒன்;று மட்டுமே தோன்றுதல் என்னும் நிலை பெத்தம், சுத்தம் என்ற இருநிலையில் அமையும் என்பது சைவசித்தாந்த கருத்தாகும். ஆனால் சங்கரர் பெத்த நிலையில் பிரம்மப் பொருள் (இறை) பல என்றும், முத்தி நிலையில் ஒன்று எனவும் கூறுகிறார். ஆதலால் இவர்தம் கருத்துப் பொருந்தாததாக அமைகிறது.
மெய்கண்டாரின் அத்துவிதக் கொள்கை
மெய்கண்டாரின் அத்துவிதக் கொள்கை, தான் அருளிய சிவஞான போத இரண்டாஞ் சூத்திரத்தில் பெத்த நிலையையும், பதினோராஞ் சூத்திரத்தில் சுத்த நிலையையும் விளக்கயுள்ளார். இறைவன் உயிரது நன்மைக்காக ஐந்தொழில் ஆற்றும் இடத்தை அவையே தானேயாய் என்னும் சூத்திரத்தின் வழி விளக்குகிறார். அவற்றை 1.அவையேயாதல் -ஒன்றாய்நிற்றல்- அபேதசம்பந்தம் எனவும், 2.தானேயாதல் -வேறாய்நிற்றல்- பேதசம்பந்தம் எனவும், 3.அவையே தானேயாதல் – உடனாய்நிற்றல்- பேதாபேதசம்பந்தம் எனவும் மூன்றாகப் பிரித்துக் காட்டுகிறார். மேலும் ஒன்றாதற்கு ‘உடம்பும் உயிரும் போல்’ என்றும், உடனாதற்கு ‘கண்ணொளியும் ஆன்மபோதமும் போல்’ என்றும், வேறாதற்கு ‘கண்ணும் சூரியஒளியும் போல்’ என்றும் உவமைக் காட்டி நிறுவியுள்ளார். மெய்கண்டாரே “இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாக நிற்கும்” என்று பொருள் உணர்த்திக் காட்டியிருக்கிறார். (சிவஞானமாபாடியம் சூத்.2,அதி.1,மேற்கோள்)
அத்துவிதம் என்னும் சொல் இம்மூன்று நிலைக்கும் பொதுவாய் நிற்பது என்பது மெய்கண்டார் தரும் விளக்கமாக அமைந்துள்ளது. அத்துவிதம் என்ற சொல் ‘அந்நியமின்மை’ என்னும் பொருளை உணர்த்தும் என்பது மெய்கண்டார் கண்ட பொருள் என்பர் சைவ நூலாசிரியர். அத்துவிதம் என்பதற்கு அந்நியமின்மை, வேறின்மை, பிரிப்பின்மை, ஒட்டியிருத்தல், உடந்தையாயிருத்தல் என்பன தமிழில் கூறும் சொற்களாக அமைந்துள்ளன. இச்சொற்களின் வழியாக அத்துவிதம் என்பதற்கு இரண்டு பொருள் இணைந்து ஒன்றாய், ஒன்று என்பதற்கும் இரண்டு என்பதற்கும் பொதுவாய் நிற்பது என்பதே பொருள். இதனை இரண்டு பொருள்கள் இரண்டு தன்மையற்று நிற்றல் என்பர். ஆதலால் சங்கரர், இராமானுசர், மத்துவர் அத்துவிதத்தை ஏகம் என்னும் இன்மைப் பொருளில் கூறுதலும், உலகு, உயிர் பொய்த் தோற்றம் எனக் கூறுதல் பொருந்தாது என நிறுவியுள்ளார்.
இறைக்கும் உயிர்க்கும் உள்ளத் தொடர்பைச் சங்கராத் வைதம்(சங்கரர்) அபேதவாதத்தின்(ஒன்றாதல்) வழி விளக்கிக் கூறுகிறது. இறையே உயிர் என்றும், பொன்னும் பொன்னாலான அணிகளன்களைச் சான்றாகக் கூறுகிறது. துவைதம்(மத்துவர்) பேதாவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இறையும் உயிரும், ஒளி இருள் போல் வேறுப்பட்டவை எனக் காட்டுவர். விசிஷ்ட்டாத் வைதம்(இராமானுசர்) பேதாபேதவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இறை, உயிர் சொற்பொருள் போல் ஒன்றுப்பட்டும் வேறுப்பட்டும் இருக்கும் என்பர். இவ்வாறு பிற சமயம் வெவ்வேறு கருத்துகளை வழங்கியிருக்க, மெய்கண்டார் இறை உயிரின் தொடர்பை தகுந்த உவமைகளின் வழி விளக்கியுள்ளார். அவற்றுள் இறை உயிரோடும், உலகப் பொருளோடும் தொடர்பு கொண்டுள்ள ஒன்றாதற் தன்மைக்கு ‘உடம்பும் உயிரும் போல’ என்றும், வேறாதற்கு ‘அகர உயிர் போல்’ என்றும், ‘கண்ணும் சூரியஒளியும் போல்’ என்றும், உடனாதற்கு ‘கண்ணொளியும் ஆன்மபோதமும் போல்’ என்றும் உவமைக் காட்டியுள்ளார். சிவஞானபோதம் பதினோராஞ் சூத்திரத்தில் ‘காணும் கண்ணுக்கு காட்டும் உளம் போல காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்’ என்னும் அடிகளைக் கொண்டு விளக்கம் தருகிறார். மெய்கண்டார் கூறிய உவமைகளை அவர் பின் வந்த உமாபதிசிவமும், “…உடல்உயிர் கண்அருக்கன் அறிவொளி போல் பிறிவு வரும் அத்துவிதம்” (சிவப்பிரகாசம்.7) என்று சிவப்பிரகாச நூல் வழி விளக்கியுள்ளார்.
அத்துவிதம் என்பதற்கு மெய்கண்டார் இவ்வாறு பொருள் கூறாவிட்டால் மகாவாக்கியம் பயனற்றதாகிவிடும் என்பது மாதவஞ் சிவஞான முனிவர் கூறிய கருத்தாக அமைந்துள்ளது. இக்கருத்து “அதுநீ ஆகின்றாய் எனவும் ஆது ஆனேன் எனவும், பொருள்படும் தத்துவமசி முதலிய மகாவாக்கியங்களின் பொருளே ஈண்டு ஓதினார் ஆகலின் ….” (சூ.2,அதி.1, மேற்கோள் வாக்கியத்தின் பாடியம்) என்று மாபாடியத்தின் வழியாக அறியஇயலுகிறது. மெய்கண்டார் காட்டும் அத்துவிதமே சுத்தஅத்வைதம் எனப்படும் என்பதை மாதவஞ் சிவஞான முனிவர், “சுத்தமாய் நின்றே பொருள் உணர்த்தலின் சுத்தாத்துவிதம் என வழங்கப்படும்”. (சூ.6,அதி.2, சிவசமவாத மறுப்பு) என்று மாபாடிய நூல் வழி உணர்த்தியுள்ளார். மெய்கண்டாரின் அத்துவிதப் பொருளை உணர்ந்திருந்த தாயுமானவர், “பொய்கண்டார் காணாப் புனிதம் எனும் அத்துவிதம்மெய்கண்டநாதன் அருள்மேவும் நாள் எந்நாளோ?” (தாயுமானவர் – எந்நாட்கண்ணி – குருமரபின் வணக்கம்-4) எனப் போற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Muththarasi.org