சிறுகதை எங்கிருந்தோ வந்தான் – மௌனி

தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த மாணவர்களில் அநேகர் கோடைவிடுமுறைக்காகத் தத்தம் ஊருக்குசென்றுவிட்டனர். என் பக்கத்து அறையும் காலியாகக் கிடந்தது. அன்று ஒரு நாள்; வரண்ட காற்றோடு வந்தவர் போல ஒருவர், திடீரென என்பக்கத்தறையில் குடிவந்தார்.

அதிகமாக அவரை வெளியில் காணக்கூடவில்லை. சதா தன் அறையிலும், மற்றும் இரவில் வெகுநேரம்கூரையற்ற மேன் மாடியிலும் பொழுது போக்கினார். இரண்டொரு தரம் தற்செயலாக அவரைச் சந்திக்க நேரிட்டபோது, அவர் தோற்றத்தைக் கண்டு, சிறிது பிரமிப்படைந்தேன், சீவிக்கொள்ளாத நீண்ட அவர் முன் குடுமித் தலையும், அகலமான நெற்றியும். மகத்தான மூளை வன்மையின் அறிகுறி போலும். ஊடுருவிக் காது வரையிலும் கருத்து ஓடிய புருவங்களுக்கு வெகு மங்கிக் களைப்புற்ற அவர் கண்கள் பதுங்கியிருந்தன.


மூன்று தினத்திற்கு முன்பு ஓருதரம் அவரை நேருக்கு நேராக ஒரு கணம் சந்தித்தேன். கண்ணிர் வரண்டு சலனமற்று நிற்கும் அவர் கண்கள் திகைப்பும், வருத்தமும் புதைந்து பாழ்பட்ட கேணி போன்று தோன்றின, அவர் நம்மை உற்று நோக்கும்போது, அவரது பார்வை, நம்மை ஊடுருவிப் பிய்த்து, அமைதி யை நம்முன் சிலாகை கொண்டு துருவிப் பார்ப்பதுபோன்ற ஒரு உணர்ச்சி – ஓர் உயர் சக்தி நம்முன் நிற்கும் பயம் – இவைதான் நம் மனதை அலைக்கும்.

மூக்கு நீண்டு வளைந்து இருந்தது. மெல்லிய உதடுகள் சிறிது விலகி இரு வரிசைப் பற்களை, கண் கூச, வெளிக்காட்டின. வாய் சிறிது பிளந்து நிற்கத்தோற்றிய அவன் தாங்க முடியாத பளுவை பெருமூச்செறிந்து, ஆனால் அலக்ஷியமாகத் தாங்கி நிற்பவன்போல் காணப்பட்டான். அவன் அழகின் பாழ்பட்ட வசீகரன்.

நான் சுபாவத்தில் ஓருவரிடமும் அதிகப் பரிச்சயம் வைத்துக்கொள்பபவன் அல்ல. என் தூக்கம் கலைந்த நேரத்தின் பெரும்பான்மையை என் ஆபீஸ் அலுவல்கள் கொண்டுவிடும். என் ஆபீஸ் அலுவல்களின் ஆயாசம் என்னை இரவில் வெகு சீக்கிரம் துயிலில் ஆழ்த்திவிடும். அவன என் பக்கத்தறைக்கு வந்ததிலிருந்து, ஏதோ என்னைச் ஒரு கரு மேகம் படர்ந்து சூழ்ந்ததுபோன்ற உணர்ச்சி என்னைப் பீடித்தது. என் மனம் அவன் உறவை மிக நாடியது. அவன் வந்து சில நாட்களே கழிந்தன. ஆயினும், அவன் சிநேகத்தைப் பெறாத எனக்கு, வெகு நாட்களைப் பயனின்றி வீணாக்கினேன் என்ற எண்ணம் ஏற்படலாயிற்று. இரண்டொருதரம் அவனிடம் பேசத்துணிந்து நெருங்கி, முடியாதது கண்டு திரும்பினேன். அவனோ வெனில், வருவதும் போவதும் இல்லாதவன் போல அருகில் இருந்தும், அசைந்து வெகு தாரத்தில் போய்ப்விடுவான். அவனை அடைய முயலுவது முடியாத காரியமெனத்தான் எனக்குத் தோன்றியது.

மூன்றுநாட்களுக்கு முன் என் ஆபீஸ் அலுவல்களின் அலுப்பு – ஆயாச மிகுதியில், சீக்கிரமாகவே படுக்கச்சென்று தூங்கிவிட்டேன்… நடு இரவில் நான் விழித்துக்கொண்டேன். ஒருக்கால் நான் தூங்காமலேயே விழித்துதான் படுத்திருந்தேனோ என்னவோ. பக்கத்து அறையிலிருந்து, கேட்டதும் கேட்காததுமாக, அடித் தொண்டையிலிருந்து அவன் பாடிக்கொண்டிருந்தான்….. பாட்டும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துவிட்டது, அது மறைந்தவிடத்திற்கு என்னையும் இழுத்துச் சென்றதுபோலும்… என்னையே என்னுடைய சவத்தையே – நான் வெகுதூரத்திற்கு அப்பால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நான் உணர்ந்த என் இறப்பு! வருத்தம், ஆத்திரம், ஓரு அருவருப்பு, ஒருங்கு கூடின… ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது…. மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக் கொண்டு ருக்கிறேன். இறப்பு..? இறப்பு…? அடைய ஆவல் கொண்டு, ஒருஸ்வரத்தை எட்டி எட்டிப்பிடிக்க மேலிருந்தும் கீழிலிருந்தும், முயலும் அவன் பாட்டைகேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சோகமான கீதம்அவன் பாடிக்கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி, கனவிற்கும், நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக் கோட்டை துடைக்கவல்ல அவனுனடய கானம், சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக்கோடிட்டது தானோ நம் வாழ்க்கை… ? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி, (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்ததுபோலும்! கனவின் கரையைத்’ தாண்டி, அவன் பாடிக்கொண்டிருப்பதைத் தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் போலும், நான் கனவு கண்டுகொண்டிருந்தேன் என்றால், எப்போது நான் விழிப்படைந்தேன்?… இப்படிப்பட்ட உயர்வகை உணர்ச்சிச் சித்திரங்களையும் உந்நதக்கோவில்களையும் எழுப்ப வல்லது, அவன் கீதம்.அப்போதுதஈன் அவனது திறமையைத் தெரிந்து கொண்டேன்.

சிறிது நேரம் விழித்திருந்த நான், எண்ணக் குவியல்களுக்கு ஆளாகி, விடியுமு மறுஓருதரம் அயர்ந்து விட்டேன். சூரியன் உதித்த பிறகேதான் எழுந்தேன். அன்று காலை எட்டு மணி சுமாருக்கு, காப்பி அருந்தியவுடன், மனதைத் திடப்படுத்திக்டுகொண்டு, அவன் அறைவாயிலை அடைந்தேன்- கதவு சிறிது திறந்து இருந்தது- அதையும் சிறிது ஒதுக்கிக் கொண்டு உள்ளே சென்றேன்

அவன் கண் விழித்துப் படுத்து இருந்தான்.

நான் ‘ஐயா, சௌக்கியம்தானே. ஏதாவது என் உதவி தேவையா’ என்று கேட்டேன். அவன் சிறிது நேரம் என்னை உற்று நோக்கினான். கனிந்து உள் நோக்கினான். கனிந்து உள் நோக்கி நின்ற பார்வையை வெளிச் செலுத்தினான், ‘அவன் சரி தான் ; – நான்தான் – என் மனதுதான் சரியில்லை’ என்று நினைத்துக்கொண்டு வெளி வந்தேன்.

அன்றுமாலை நான் ஆபீஸிலிருந்து வந்தபோது அவன் அறை பூட்டியிருந்தது. அவனை விடுதியில் காணவில்லை. ‘வெளியே – எங்கே – எதற்காக’ என்றெல்லாம் நினைத்து, இரவு படுக்கைக்குச் செல்லு முன்பு மற்றொரு தரம், நான் அவன் அறைப் பக்கம் சென்றேன். அப்போதும் பூட்டப் பட்டுத்தான் இருந்தது.

“போக்குவரவு அற்ற உலக சஞ்சாரி, பூட்டின் திறவுகோல் உன்னிடம்தஈன் இருக்கிறதோ” என்றெண்ணியவாறே பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு, என் அறை அடைந்து படுத்துத் தூங்கிவிட்டேன், இது நடந்தது நேற்று இரவு முன் பகுதியில், அன்று நான் நடு இரவிலும் விழித்துக்கொண்டேன், கனவு கண்டு கொண்டிருக்கவில்லை; அரை தூக்க உணர்ச்சியுமல்ல. என்னைத் தடவி பார்த்துக்கொண்டேன். நான் முனங்க வில்லை; சங்கீதமும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அடுத்த அறையிலிருந்து முனகல் சப்தம் கேட்டுக்கொண்டிந்தது. நடுவே, அவன் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் புரியரமல் கேட்டுக்கொண்டிருந்தது, அவனுக்கு உடம்பு சரியில்லை என்று எனக்கு நிச்சயமாகத்தோன்றியது… மறுபடியும் நான் தூங்க ஆரம்பித்தேன்.

காலையில் எழுந்ததும் அவன் அறைக்கு சென்றேன். கொஞ்சம் தயங்கியே உள் நுழைந்தேன். அவன் கண்கள் மூடியிருந்தன; அவன் நெற்றியை என் கையால் தொட்டுப் பார்த்தபோது, சுரம் கடுமையாக அடித்துக்கொண்டிருப்பது கண்டேன், நான் வெளியே சென்று, காப்பி அருந்திவிட்டு, அவனுக்காகவும் ஒரு கோப்பை வாங்கி வந்தேன். உள்ளே சென்றதும், அவன் ஆயாசத்துடன் கண்களைப் புரட்டி என்னைப் பார்த்தான். ‘ஐயா உங்களுக்கு சுரம் கடுமையாக அடிக்கிறது’ என்று சொல்லி காப்பியை நீட்டினேன். அதை வாங்காது படுத்தபடி, கோப்பை என் கையிலிருக்க, அப்படியே குடித்தான், இவ்வகையில் அவனுக்கு உதவி யளித்தது எனக்கு வருத்தைத்தான் கொடுத்தது.

அறையிலே தனியாக அவன் பக்கத்தில் இருப்பதிலும் மனச் சங்கடம். ஆபிஸுக்குப் போயும் என் மனது நிம்மதி கொள்ளவில்லை. அன்று பிற்பகல் ஓய்வு எடுத்துக்கொண்டு என் விடுதிக்குத் திரும்பினேன். இன்னும் சுரம் தணியவில்லை.

எனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் சென்று அவரைக் கூட்டி வந்தேன். அவன் மௌனமாகப் படுத்திருந்தான். இழுத்த திசையில் செல்லக்கூடிய அவ்வளவு பலவீனம். வைத்தியர், அவனைச் சோதித்து மருந்து கொடுத்து விட்டு, மறுநாளும் சுரம் தணிவடையாவிட்டால்,

பெரிய ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்க லெட்டர் தருவதாக என்னிடம் சொல்லிச் சென்றார். இரண்டொரு தரம், அவன் உற்றாருக்குக் கடிதம் எழுத விலாசம் கேட்டுப் பார்த்தேன். அவன் பேசவில்லை. அவன் கண்களின் தேங்கிய வெற்று வெளிப் பார்வையை அர்த்தப்படுத்த என்னால் முடியவில்லை. மறு நாளாயிற்று, இன்னும் அவனுக்கு சுரம் தணியவில்லை. பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றேன்.

இரண்டு வைத்தியர்கள் பரிசோதித்தனர். நீண்ட நேரம் தங்களுக்கள் வைத்திய பரிபாஷையில் விவாத்திதுக் கொண்டனர், அவர்களது பாவனையும் பேச்சும் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் அதை நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஒருவர் என்னிடம் நோயாளியைப் பற்றி விசாரித்தார். நான் சொன்னதைக் கேட்டு ஆச்சரிய மடைந்த அவர், சுற்றத்தாருக்கு எழுதி அழைக்கும்படி கூறினார். வருத்தம் தாங்க முடியவில்லை; அவ்விடம் விட்டு என் அறையை அடைந்தேன். அன்று முற்பகலையும் சிரமப்பட்டுக் கழித்தேன்.

அன்று மத்தியானத்திலிருந்து அவன் பிரக்ஞை தவறிவிட்டான். அன்று சாயந்திரம் நான் அவனைப்பார்க்கச் சென்றபோது சிறிது குணமடைந்தவன்போல, கண் விழித்திருந்தான். தன் ஸ்திதியை உணர்ந்தவன் போன்றே இருந்தான். அப்போது அங்கு வந்த டாக்டர், அவனைப் பார்த்து “உங்கள் நெருங்கியவர்களை வரவழைப்பது நலம். யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்” என்றார். எங்கள் இருவரையும் மாறி மாறி இரண்டுதரம் பார்த்தான். இருவரையும் பார்த்தான். ஆனால் நிதானமாகக் கண்களை மூடிக்கொண்டு, ‘ஒருவருமில்லை – இல்லை – நான் தான் – ஆம்’ என்று பதிலளித்தான். களைப்பு மேலிட்டு அயர்ந்தவன் போல இருந்தான்.

டாக்டர் வேறு நோயளிகளைப் பார்க்கச் சென்று விட்டார். நான் சிறிது நின்றேன். நின்றபடி குனிந்து பார்த்தேன். அவன் இனி கண் திறந்து பார்க்கமாட்டான் என்ற ஒரு சிறு சந்தேகம் என் மனத்தைக் கவ்வியது. அங்கு நிற்கவும் என்னால் முடியவில்லை. வெளி வந்தேன். ஒருகணம் அவன் இறந்துவிட்டான் என்று நிச்சயமாகப் பட்டது; ஆனால் அவனைத் தொட்டுப் பார்த்து நிச்சயப்படுத்திக்கொள்ள ஒரு பயம். ஒருக்கால் தொட்டுப் பார்த்தால் சந்தேகம் நிச்சயமாகி, உதறித்தள்ள முடியாது பலப்பட்டு விடுமோ என்ற பயம். அவன் இறக்கவில்லை; சிறிது களைப்பு – நிச்சயம் – சந்தேகம் – நான் அவ்விடம் விட்டு வெளியேறி என் அறையை அடைந்தேன்.

அவன் அறையைத் திறந்து உள் சென்றேன். ‘என்ன பிசகு – ஏன் செல்லக் கூடாது?’ அவன் சாமான்களை ஆராய்ந்தேன். (அதிகம் ஒன்றுமில்லை; இரண்டொரு சட்டைகளும், படுக்கையும்தான் இருந்தன.) எல்லாவற்றையும் நன்கு புரட்டிப் பார்த்ததில் படுக்கைத் தலையணையின் கீழ், இரண்டு மூன்று கடிதங்கள் இருந்தன. கடிதங்களை உனறயில் போட்டு தபாலில் சேர்க்கும் நிலையில், மேல் விலாசம் எழுதப்படாமல் இருந்தன. எந்த விலாசத்திற்கு அனுப்புவதென்றுதான் புரியவில்லை. மிகுந்த ஆர்வத்தோடு அவைகளைப் பிரித்துப்’ படித்தேன். யாருக்கு எழுதியது என்று தெரிந்தது. ஆனால், அக்கடிதங்களை அனுப்ப முடியாததுதான். ஏன், இவனே ஒருக்கால் நேராகச் செல்வதற்குப் போயிருக்கலாம்.

திடீரென்று என் மனது துக்கமடைந்தது.

சுமார் இரவு எட்டு மணிக்கு நான் மறுபடியும் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அங்கு சேர்ந்ததும், அவனைக் கிடத்தியிருந்த இடம் காலியாக இருந்தது. ஒருக்கால் அவனை வேறிடத்திற்கு மாற்றி இருக்கலாம் என நினைத்து அங்கு கண்ட ஒரு நர்ஸ் யுவதியைக் கேட்டேன். அவள் சிறிது திகைத்தாள். பிறகு, “நீங்கள் சென்ற இரண்டொரு நிமிஷத்தில் அவர் இறந்துவிட்டார்” என்றாள். பக்கத்தில் நின்ற டாக்டர், “நீங்கள் இப்போதுதான் வருகிறீர்கள் போலும். சிறிது முன்பு அவரை அடக்கம் செய்தனர்” என்றார்.

‘இறந்தகாலம் தன், நிர்மாண வேலையைப் பெரியக்கட்டுக்கோப்பில் செய்து வருகிறது; அவனும் சதக் கணக்கில் சேர்க்கப்பட்டான், சரி தெரிந்தது போதும்’ என்றெண்ணிக் கொண்டு அவன் கிடந்த இடத்திற்கு ஒரு பெருமூச்சுடன் விடை பெற்றுக்கொண்டு திரும்பினேன். அவனுடைய கடிதங்கள் என் மேஜையின்மீது பிரித்தபடி கிடக்கின்றன. அவற்றுடன் ஒரு வார லீவு கேட்டு என் ஆபீஸுக்கு எமுதிய கடிதமும் இருச்கிறது.

என் மனதில் நிம்மதியில்லை. கூரையற்ற மேல் மாடிக்குச்சென்று உலாவினேன், ஆகாயத்தை வெகுநேரம், கண்களில் நீர் சுரந்து பார்வை மழுங்கும்வரை உற்று நோக்கினேன். அன்றிரவு பிரகாசமாகவே இருந்தது. ஆனால் சந்திரனால் அல்ல. சந்திரன் இன்னும் புறப்படவில்லை.

யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில், ஜ்வலிக்கும், விலை கொள்ளா வைரங்களைக் கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் வீசி இறைத்தான் போலும். ஆயிரக் கணக்காக அவை அங்கேய பதிந்து இன்னும் அவள் காரியத்தை நினைத்து மினுக்கி நகைக்கின்றன.

மெதுவாகக் கூரைகளுக்குமேல் சந்திரன் தெரிய ஆரம்பித்தது. அதன் ஜோதியில் சிறிது மங்கலடைந்தன நக்ஷத்திரங்கள். ஆயினும் அவைகள் மினுக்கிக் கொண்டிருந்தன. என் மனத்தில் தோன்றிய அநேக கேள்விகளைத் தெதளிவுப் படுத்தாமலேயே, சிலசில, சந்திர ஒளியில் மறைய ஆரம்பித்தன. எஞ்சினவை என்னனப் போலவே, சந்தேகத்திலும் சஞ்சலத்திலும் ஈடுபட்டு, பிரகாசம் குன்றி பதிந்திருந்தன. ஆகாய வீதியில் தவழ்ந்து வந்த சிறு சிறு மேகங்களைச் சந்திரன் துரத்திக் கொண்டிருந்தான். நான் கீழே இறங்கி என் அறையை அடைந்தேன்…

வரும்போது இரவு கிட்டத்தட்ட இரண்டு மணியாகி விட்டது; ஆனால் எனக்குத் தூக்கம் வரவில்லை. ஒருக்கால் தூங்கினால் பக்கத்தறையிலிருந்து அவன் பாட்டு கேட்குமோ…?

எனது அறையின் மேற்குப் பார்த்த ஜன்னலிலிருந்து, சாய்வாக, வருத்தத்தில் சந்திரன் எட்டிப் பார்க்கிறான். துரத்தப்பட்ட சிறு மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பயம் நீங்கி ஊர்ந்து வருகின்றன. நகரத்தில் தூக்கம் உலாவு கிறது. எங்கும் நிசப்தம். துல்லிய வெண்ணிலா, வானத்தின் சிறு ஒளி சரிகைகளை மொழுகி மறைத்து வெறிச்சென்று காய்ந்தது. களைப்படைந்த சந்திரன் சலிப்புற்று இருக்க, மேகங்கள் குவிந்தன. உயரமாக வளர்ந்த வீதி வீடுகள் பாழ்பட்டு, உயிரறறு வெளிக் கோட்டுருவங் கொள்ளுகின்றன.

என் கண்களில் ஒரு பாரம் தங்கி இமை கொட்டுகிறது… அவன்… கீதம் ?…

கிழக்குப் பார்த்த என் அறை வாயினின்று, சூரியக்கிரணம் உள்விழுந்து ஓளி கொடுத்தது. உலக இரைச்சலும் ஆரவாரிப்பும், ஆயிரம் வாயினின்றும் வெளிப்பட்டு அலறிக் குமைந்தன. என்னைச் சுற்றிலும் ஒரே வெளிச்சம். என்

எதிரிலுள்ள மேஜையின்மீது கடிகாரம் 8 மணியைக் காட்டுகிறது.

ஒரு அமுக்குப் பிசாசினின்று விடுவிக்கப்பட்டவன் போல் நாற்காலியினின்று எழுந்தேன்… சென்ற சில நாட்களில் கண்டதை நிச்சய வாழ்வின் ஒரு பகுதி என்று நான் எண்ணி இருக்கமாட்டேன். ஆனால் என் மேஜையின் மீது அவனுடைய லெட்டர்களும், என்னுனடய லீவு லெட்டரும் என்னை வெறித்து நோக்கிக் கொண்டிருக்கின்றனவே!

அவனால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களைக் காட்டுகிறேன்…

(முதல் கடிதம்)

பிரியமுள்ள பத்மா –

உன்னைவிட்டு நான் கடைசியாகப் பிரியும்போது சொல்லிக்கொண்டு வரவில்லை. உனக்கு அது வருத்தமாக இருக்கலாம். நீ தூங்கிக் கொண்டு இருந்தாய். உன்னை எழுப்பாமல் விட்டு வந்தேன்.

ஒரு காலத்தில் நீ அழகிய சிறு பெண்ணாய்இருந்தாய். ஓல்லியாக, உயரமாக இருந்த நீ உன் குதிக்கால் இடிக்க பாவாடை கட்டிக்கொண்டு,கழுத்தில் ஒரு வடம் சங்கிலி அணிந்து சிறியடோலக் காதோடு, உன் முகத்தை தொங்கவிட்டுக் கொண்டு, துவண்டு துவண்டு நடந்து வருவாய்; – என்னோடு பேசுவாய். அப்போது உன்னைப் பார்ப்பது அர்த்தமில்லாத ஆனந்தப்பார்வை. ஆனால், இப்போது, அந்த நினைவு உணர்ச்சி பெற்ற ‘வருத்த -சந்தோஷம்.’ 

பிறகு நீ பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாய். காதில் தோடு அணிந்து கொண்டாய். இடுப்பில் புடவை. ஆனால், உன் நீண்ட முகம், முன்போல் தான்; முகவாய்க்கட்டை பழையபடியே கழுத்தடியில் இடிக்க, என்னோடு பேசாது நாணிக் கோணிப் போய்க் கொண்டிருந்தாய்.

கடைசியாக, மேல் நோக்கிய உன் முகத்தின் வசீகரத்தை, திறந்த உன் கண்களைப் பார்க்க முடியவில்லை. நீ தூங்குவது போல் இருந்தாய்… ஆயினும் சில சமயம் நீ அப்படியே இறந்து விட்டாயோ எனறு தோன்றுகிறது… நீ இறக்க முடியாது. இறந்தாலும் போயேன்… ஆனால் இப்படி முடியாது – பத்மா – இப்படி உன் பிடிப்பை விட்டுவிட முடியுமா..? நீ இறக்க வில்லை எனறு சில சமயம் எனக்குத் தோன்றுகிறது – பத்மர – நீ இறந்தாயா…? ஏன் இறந்தாய்? – இல்லை – இல்லை ‘யார்’ உன் பிடிப்பை இவ்வுலகில் விட்டு, உன்னை இறக்க வைக்க முடியும்? நீ ஒரு போதும் இறக்க முடியரது… 

நம்மூரில் உங்காத்துக்கு மேல் வீட்டில் கூனப்பாட்டி இருந்தாளே தெரியுமா? அவள் செத்துப் போகும்போது நீ சிறு பெண். கொஞ்ச நாள் கழித்து, விளையாட அவாத்து அம்பியைக் கூட்டி வரச் சென்றோம். உனக்கு ஞாபகம் இருக்காது. ‘கூனப் பாட்டி எங்கே என்று கேட்டேன், ‘காணும்’ என்றய். ‘பத்மா கூனப் பாட்டி செத்துப் போய் விட்டாள் என்றேன். நீ ‘அப்படின்னா! என்றாய். திரும்பப் பார்க்க முடியாது; வரமாட்டாள்’ என்று உனக்கு தெரியச் சொன்னேன். குழந்தை நீ. என்ன சொன்னாய் தெரியுமா?

“பொய் சொல்லுகிறாய். பாட்டியைக் காணோம். ஆனால் வருவாள். அதோ பார் – அவள் தடிக்கம்பு இருக்கிறதே. அதை எடுக்க வர மாட்டாளா? எப்போதாவது வருவாள்” என்றாய். ஆமாம் நீ சொல்லியதைதான் இப்போது உண்மையென உணருகிறே..” பத்மா, நாளைக்குச் சொல்லுகிறேன்.

(இரண்டாவது கடிதம்)

பிரியமுள்ள பத்மா,

என் மனது சரியில்லை; சரியில்லை என்றால் காலத்தை வீணில் கழிக்கிறேன் என்பது போலும். ஆனால் ஒன்று சரி. நடந்த காரியத்தின் மதிப்பும், காலத்தின் விசேஷமும், ஒன்றுக்கொன்று பொருந்திக் கலவாமல், தாரதம்மியப்பட்டு, தனியாகத் தோன்றுகிறதே – அதுதான் சரி- தனி தோற்றமும், மதிப்பும், விசேஷமும் ஒன்றுக்கும் கிடையாது. உணர முடியாது. காலம் கழித்தது வீண் என்ற பாவனைக்குக் காரணம் ஆராயும்போது பார்த்தாயா? அர்த்தமற்றவைகளாகத் தானே – கொள்ள முடிகிறது.

உன்னை என் மனதில் அடிப்படையாகக் கொள்வதினாலேதான் என் காலத்தை வீணாக்கினேன் என்ற தோற்றம் போலும். மேலே கொஞ்சம் போகும்போது, வாழ்க்கைப் பயன் உன்னை அனடவதினால் என்று நிச்சயமாக எண்ண முடியவில்லை. ‘சீ சீ, ஆதியில் சொல்ல முடியாது எண்ணி இருக்கலாம்; இப்போது முடிந்தது. எண்ணுவது பைத்தியக்காரத்தனம். உனக்குக் கலியாணம் ஆன பிறகு இவ்வெண்ணம் கொள்வது மனதில் விரோத உணர்ச்சியையே வளர்ப்பதாகும். விரோத உணர்ச்சி உண்டாவது..?

காரணமற்ற, கண்ணற்ற காதல்? கடமை -? அப்படி என்றால் என்ன யோசிக்க முடியும; சொல்ல முடியும் ; ஆ, அவைகளை உணரும் போது – சிந்தனைகளை உணர்ச்சி கொள்விக்கும் போது, மூளையையும் மனதையும் அறவே களையும்போது நாம் யார் – எவ்வகைக் கேவலப்பிராணி !

இவைகள் எல்லாமெ அர்த்தமற்ற பேச்சுக்கள்; வளைந்த வானம் எதிரொலிக்காத சப்தங்கள். அதற்கும் மேலே போனால் அர்த்தமற்ற வார்த்தைகள், மிகுந்த ஜீவ உணர்ச்சிகொண்டு, அறிவைக் களைந்து ஞான விரோதம் கொள்ளுகிறது; இவ்வகை வித்தியாசங்களை எங்கு புகுத்துவது? உயிர் இருந்தால் உயிர் கொண்ட மிருகங்கள் – உயர்வகை சிருஷ்டி ஆனந்தம் – ? 

இதுவும் பிசகு போலும், நான் சொல்லுகிறேன் ; நான் ஞான முக்தியை அனடந்தபோது, – நான் சொல்லுகிறேன் …

உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. உனக்கு அவரை நன்றாகத் தெரியும் ஆனால் அவருக்கு உன்னைத் தெரியாதோ. நேற்று அவர் ஒரு தெரு வழியாக நடந்து போகக் கண்டேன்’. வீதி வரிசை கூடுவதால் அவரைத்’ திரும்ப வைக்கவில்லை. நான்தான் அவரை முன் சென்று கடந்து திரும்பிப் பார்த்தேன். ‘பத்மா சௌக்கியம்தானே’ எனறு அவரைக் கேட்டேன். ஏன் என்னை அவ்வளவு வெறிக்கப் பார்த்தார். பேசாது வருத்தத்துடன் சென்றார். அவர் மனது சரியில்லை. 

நான் கேட்டதும் சரியில்லை என்று தோன்றியது. நான் நினனப்பதே சரியில்லையே. நீயே எனக்குத் தோன்றுவது சரியில்லை என்பாயே … 

ஏன் நான் சரியாக இருக்க வேண்டும். சரியாக …?

உனக்குச் சிலசில சமயம் பைத்தியம் உண்டாவது உனக்குத் தெரியுமர? எனக்குத் தெரியும். நீ என்னைப் பற்றித் திடீர் திடீடுரென்று மிகுந்த ஆச்சரியகரமாக, உண்மை தோன்றும்படி வார்த்தைகள் சொல்லும் போது, ஏன், நீ பைத்தியம்தானே ?

எனக்குப் பதிலே தெரிவிக்காதே. செய்தால் மிகுந்த சரி. நீயும் என்னை பைத்தியமென்று எண்ணலாம். உன் மூளைக்குத்தான் எல்லாம் தோன்றுமே.

பத்மா – பத்மா – நீ ஏன் என்னிடம் இப்படி இருக்கிறாய் …? ஏன் ..? என்னை மிகுந்து தெரிந்து கொண்டதினாலா? பத்மா பைத்தியமே – ஏன் நீ …? 

இன்று எனக்குத் தலைக்குள் மூளை சுற்றுகிறது. அது தனி உயிர் பெற்றதுபோல் களிக் கூத்தாடுகிறது. ஆனல் என் மனமோ மிகுந்ததுக்கமுற்றிருக்கிறது.

(இடங்களில் புரியாது கிறுக்கியும் கண்ணீரால் கறைபட்டும் இருந்தன. மற்றும் இரண்டொரு லிகிதங்கள் பாதி பாதி எழுதப்பட்டு அதிகக் கோர்வை இல்லாது இருந்தன. ஆனால் மிகுந்த ஜீவ உணரச்சி உள்ளதாயும், பளிச்சென்று மின்வெட்டுப்போன்று இழுத்தும், கடுமையாக இடித்து மடிவது போன்றுந்தான்.) …

நான் ஏழுநாட்கள் லீவு எழுதிப்போட்டுவிட்டு மறுநாள் அவனூருக்குச் சென்று, அங்கு சில நாட்கள் தங்கி, அவனைப்பற்றி நன்கு விசாரித்து அறிந்தகொண்டு வந்தேன். எங்கிருந்தோ வந்தான் , இறந்தான், இறந்தான்… இவனைப்பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் இப்படித்தான் தோன்றுகிறது. அவன் வாழ்க்கையே புதிர். அவன் வந்ததும் ‘போனதும்’ ஒரு புதிர் – முன்னிகழ்ச்சி தெரிந்த பின்பும் அவன் ஒரு புதிர்தான். அவ்வூரை விட்டுத் திரும்பும்போது அதுதான் என் மன நிலை. நாளைக்கு நான் பழையபடி என் ஆபீஸ் செல்லவேண்டும். லீவு முடிவடைந்துவிடும். அவனைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள, அவன் அவ்வூரை விட்டு வந்த வரலாற்றை மட்டும் சொல்லுகிறேன். அதுவே, போதுமானது… ‘பத்மா’ என்றதும் கண்களை மூடிக் கொண்டு வியாதியால்’ படுத்திருந்தவள் , கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

‘அதிகமாகப் பேசாதே. இரண்டு நாள் கழித்தால் பயமில்லை என்று டாக்டர் சொன்னார் என்றார் ’ அவள் தகப்பனார் சேஷய்யர்.

‘இவள் படும்பாட்டைக் காண முடியவில்லையே. ஈசுவரன் ஏன் என்னை இப்படிச் சோதிக்கவேண்டும்.’ என்று கண்களில் நீர் ததும்ப அவள் தாயார்’ லக்ஷ்மி அம்மாள் சொன்னது மிக வருத்தமாக இருந்தது. அந்நேர மட்டும் சங்கரனை இமை கொட்டாமல் பார்த்திருந்த பத்மா, சிறிது கண்களை மூடிக்கொண்டாள். பிழியப்பட்டு இரு சொட்டுக் கண்னீர் கன்னத்தில் பாதி ஓடி, காய்ந்து மறைந்தது.

‘எல்லாம் சரியாகிவிடும், நாம் செய்வது என்ன இருக்கிறது. எல்லாம் நன்மைக்கே முடியும்’ என்றான் சங்கரன். தான் நின்றுகொண்டிருப்பது. கீழே அவள் படுத்திருப்பது, சுற்றி அவர்கள் நின்றிருப்பது, யாவும் மாயை, சுற்றிச் சூழ்ந்த ஒரு விளங்காத பொருள் என்றே அவன் நினைத்தான்.

‘சங்கரா’ என்ற சப்தம் காதில் விழ, லக்ஷ்மி அம்மாளை நோக்கி நின்ற அவன் குனிந்து அவளைப் பார்த்தான். கெஞ்சுதலைப் போன்ற அந்த ஈனஸ்வரம் காதில் விழுந்த போது, யாதிலும் நம்பிக்கையற்று கனடசியாக சிறிது இவனிடம் ஊசலாடிக்கொண்டிருந்த ஓர் உணர்ச்சியைச் சிறிது எழுப்பியது. இவ்வகை உணர்ச்சி அவள் மூலமாகப் பெற்றது அதுவே முதல் தரம். உலகம் என்றால் அவள் ஓருத்தியே என்று பலமுறை அவள் எண்ணியிருக்கிறான்.

ஆள் ஒருவன் விரைத்தெளி விஷயமாகப் பேச வெளிவாசலில் வந்து கூப்பிட, சேஷய்யர் வெளியே சென்றார். பத்மாவின் தாயாரும் சமையலைக் கவனிக்க உள்ளே சென்றாள் – முன் நடைத் தாழ்வாரத்த்தில் கிழப்பாட்டி ஏதோ முணுமுணுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்

“சங்கரா – இறப்பதை அக்கணத்திற்கு முன் உணர்வது உண்னமயாயின், என் வாழ்நாட்க்ள் அநேகமாக முடிவடைந்து விட்டன எனறு படுகிறது எனக்கு. உன்னிடம் எனக்கிருந்த அன்பு, சில வருஷங்களாக அநேகவித மாறுதல்களால் சலிக்க ஆரம்பித்தது. இரண்டொரு மாதமாக, என் வாழ்க்கைக்கு நீ இன்றியமையாதவனாக இருக்கிறாய் என்ற நோக்கத்தைக் கொண்டேன். அறிந்தவற்றை நன்கு நினைக்க முடியவில்லை ; சொல்வதற்குமில்லை. அறிந்தவற்றில் ஆனந்தம் கொள்வதற்குமில்லை ஆனால் இப்போது உன்னிடம் சொல்லுவதில் ஒன்றும் பிசகில்லை”. என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள்.

சிறிது சென்று “நான் இறப்பதில் எனக்குக் கொஞ்சமும் வருத்தமில்லை. இளமையில் இறப்பதால், வாழ்க்கையில் முதிர்ந்து பாழ்படாது, என் ஞரபகம்

இளமையாகவே இருக்கும். ஆனால் என் பிறப்பு, வாழ்வு, இறப்பு முதலியவைகளினால் பலருக்குப் பலவிதப் பிடிப்பிற்குக் காரணமானது பற்றி, அவர்கள் வருத்தங்கொள்வதை எப்படித் தடுக்க முடியும்? அதனரல் என் துக்கத்தை எப்படி அகற்ற முடியும் ? ஒருவர் இறக்கும்போது அவர் வாழ்வின் தன்மை அவரோடு மடியுமானால், இறப்பு பிரமாதமாகப் பொருட்படுத்த வேண்டியதொன்றில்லை.”

சங்கரன் தலைகுனிந்தவாறே கேட்டு நின்றான். அவள் ஸ்தூல சரீர இழப்பை அவன் விரும்பவில்லை … அவளை முன்பு, அவன் ஓருவிதத்தில் இழந்ததையும் அவன் பொருட்படுத்தவில்லை. மனது மாறி நிம்மதியடைந்து விட்டது. ஆனால் அவள் இறப்பினால் எல்லா எண்ணங்களும் ஒருங்குகூடி மனதைப் பிளக்குமென்பதை உணர்ந்தான்.

யோசித்து நின்றிருந்தவன், பத்மா திடீரென்று பாட ஆரம்பித்ததைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனான். உள்ளிருந்த பத்மாவின் தாயார் போட்டது போட்டபடியே ஓடி வந்தாள். வாசலிலிருந்த சேஷப்பய்யர் பாதிப் பேச்சில்

எழுந்து உள்ளே வந்தார். சங்கரன் தலை சுழன்றது ; கண்கள’ வெளித் தோற்றங்களைக் கொள்ள மறுத்தன.

“என்ன, என்ன” என்று கேட்டு நின்றார் சேஷப்பய்யர்.

“ஒன்றுமில்லை. சுர வேகம். நீங்கள் போய் டாக்டரை அனழத்து வாருங்கள்” என்றான் சங்கரன்.

அவர் வெளியே போய்விட்டார். லட்சுமி அம்மாள் ஒன்றும் தோன்றாமல், பெண்ணருகில் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

“அம்மா நீ உள்ளே போயேன். என் கணவரை அப்பாவிடம் சொல்லி வரச் செய். அம்மா ஒன்றுமில்லை. பயப்படாதே, அழாதே அம்மா. எனக்கு ஒன்றுமில்லை. அவருக்கு என்னை இந்த நிலையில் காணச் சகிக்காது. எனக்கு என்னவோ அவரைப் பார்க்கவேணும்போல் இருக்கிறது. சரி, நீ உள்ளே போ, அழாதே” எனறு சொன்னவள் கடைசி வார்த்தைகளை நோவும் மனது மிக நோக, வெடுக்கென்று சொன்னாள். அவள் தாயார் கண்ணும் கண்ணீருமாக, விம்மிக் கொண்டே உள்ளே சென்றாள்.

பத்மா, நின்றிருந்த சங்கரனை உட்காரச் சொன்னாள். கண்களை மூடிக்கொண்டு விட்டாள்.

அவள் பக்கத்தில் உட்கார்ந்ததும் சங்கரன், ‘எனன பத்மா…’ எனறான். ‘சீ…. சீ நீ யார், பத்மா என்கிறாயே. ஏ சனியனே, என்னை ஏன் பீடித்து இருக்கிறாய், நீ போ’ என்று வேகத்தோடு திமிருவது போல உடம்பை நெளித்து முறித்துக்கொண்டு கண்களைத் திறவாமலே சொன்னாள்.

அவள் வாயினின்று ஜன்னி வேகத்தில் வந்தன வரர்த்தைகள்; மீறி வந்த வேகத்தினாலே, அவ்வார்த்தைகள் அவனை மிகக் குலுக்கி விட்டன. மனது

கலங்கியது; கண்கள் சுழன்றன. அந்த நிலையில் அவள் முகத்தைச் சற்று நோக்கிய போது அவள் மாசற்ற ஆத்மாவை நனகுணர்ந்தான்.

“சங்கரா, நான் என்ன சொன்னேன், சொல்லப் போகிறேன் எனற நிதானம் கிடையாது. வார்த்தைகளால் முடியாதபோது, பேச்சுக்கள் எவ்வளவு பயனற்றது என்பது தெரிகிறதா? ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல. இவ்வகையாகப் பேசுவது, ஏன், உன்னை உன் ஜீவிய காலத்தில் வேகமாகத் தாக்காதா ?” என்றள் பத்மா.

‘பத்மா சிறிது பேசாமல் இரு. களைப்பு ஏற்படும்’ எனறு அவனால் நிதானமாகச் சொல்ல முடியவில்லை. கட்டுக் கடங்காமலே கண்ணீர் உதிர்ந்தன.

அவள் உணர்ந்தவள் போன்று “தான் செய்வதற்கு தானே காரணம் என்ற இடம் கொடுக்கும் மூளை கெட்ட பின், அவர் செய்வதற்கு அவர் பாத்தியமா… நீ இப்போது வருத்தமடைவதற்கு நன் காரணமில்லை. பிறகு, நீ வருத்தம கொள்ளாதே… சங்கரா! ஏன் நீ அழவேண்டும்? எனக்காக ஏன் அழவேண்டும்? எனக்காக ஏன்? எனக்குப் பினனால், வேண்டாம்… வேண்டாம் சங்கரா, வருத்தத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். நான் போகிறேன் திரை அருகில் இருந்தாலும், அப்புறம் என்ன என்று அறியக் கூடவில்லை; நீக்கியும் கண்டு சொல்ல முடியவில்லை. நீ பார்க்கும்போதே மறு பக்கம் போவதை நீ அறிந்து கொள்ள வேண்டின் சிறிது நேரத்தில் தெரிந்துகொள். வருந்தினாலும், கண்ணீர் விட்டாலும் இனி என்னைப் பார்க்க முடியாதவனாகப் போகிறாய். நான் போகும் போது – ” களைப்பு மேலிட்டதினால் சிறிது பேசாது நிறுத்தினாள்.

“சிறிது குனிந்து கேள். பேச முடியவில்லை. கிட்டே – கிட்டே ஆம் சற்று முன் விரும்பிய முகத்தின் கிட்டே. முன்பு நீ, முதுகின் கிட்டே, வெகு தூரத்தில் ஆனால் மிகக் கிட்டே. ஒரு – ஒரு -.” அவள் பேச்சுக்கள் நின்றன. அவள் கண்களின் ஜொலிப்பு கடுமையாயும், விகாரம் கலந்ததாயும் தோன்றியது. கண்களும் மூடின. சங்கரன் அறியாதே உதிர்த்த கண்ணீர், அவள் முகத்தில் சொட்டின. ஏதோ அவள் முகத்தருகில் சொல்ல நினைத்தவன் போன்று தன் முகத்தை வெகு சமீபமாகக் கொணர்ந்தான். சிறிது தயங்கினான். பத்மா, கண்களைப் பாதி திறந்தவள் மறுபடியும் இறுக மூடிக்கொண்டாள். ஒன்றும் தோன்றாமல் தலை நிமிர்ந்தான் சங்கரன். அவன் தன் தொண்டயில் அனடத்த விம்மலை வெளி வராமல் விழுங்கினான்.

‘போதும் – போதும்’ என்று ஆரம்பித்தாள் பத்மா. ‘போதும்’ என்றே முடிவடைந்துவிட்டது அவள் பேச்சு. அவள் முகத்தில் சிறிது ஆனந்தக் குறி- அது மறைந்தது பனழயபடி, சிறிது சென்று அவள் அழுதாள். வாய் விட்டில்லை; தன் ஆத்மா உருகி கண்களின் வழியாக ஓடுவதை தான் விழிக்காது தெரிவித்தாள். திரும்பவும் பழைய படி; முகத்தில் ஒரு சிரிப்பு. தூங்கும் குழந்தை ஆனந்தக் கனாக் கண்டு புன் முறுவல் பூப்பது போன்று… ஏதோ ஒரு வேகம். கடுமையில் மிகத் தணிவு பெற்றது.

கண்கள் மூடின. வாய் எதையோ முணுமுணுத்தது, ஒரு தரம் மார்பு மூச்செரிந்து அசைவற்று நின்றது.

சங்கரன் எழுந்து நின்றான். குனிந்து அவள் காது கேட்கும் வண்ணம், மெதுவாக, ‘பத்மா நன்றாகத் தூங்கு, களைப்படைந்தாய். பிறகு பார்க்கிறேன் நன்றாகத் தூங்கு’ என்று ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு, நன்கு வாய் திறக்காமலே சொன்னான். அவன் உடம்பெல்லாம் குலுங்கியது. ஏதோ மனதில் குடிகொள்ள யத்தனித்ததைக் கண்டு நடுங்கினான். நிச்சயத்தைக் கண்டு உணரத் தயங்கிப் பயந்தான். குளறிக்கொண்டு, ஆத்திரமாகக் கையை உதறிக்கொண்டு ‘நான் மறுக்கிறேன். நான் மறுக்கிறேன்’ என்று முணுமுணுத்துக்கொண்டே வெளியேறினான்.

அவன் மனதில் துக்கம் இல்லை. கண்களும் வரண்டு துக்கம் கடந்த பார்வையைக் கொடுத்தது. வீட்டு வாயிலில் சேஷப்பய்யரையும், டாக்டரையும், கண்டான். ‘பத்மா.?’ என்றதற்கு ‘நன்றாகத் தூங்குகிறாள்’ என்று சொல்லி விட்டு நடந்தான். தன் வீட்டை அடைந்து உள் சென்றவன், மறுநிமிடம் வெளிவந்தான்.

அவன் அவ்வூர் சாலையை அனடந்தபோது, ஊரிலிருந்து அழுகைக் குரல் கேட்டது. ஒன்றும் புரியாது, தனியே தன் வழி நடந்தான்.

பளீரென்ற பகலும் மனதில் இருண்டது, தனிவழிப்போக்கன் போன்று, வாழ்க்கைப் பாதையில் அலுத்துச் சலித்தும், பின்னும் வழிகடத்தவேண்டி, நடந்தான். காலடியும், ஒளி கொள்ளாது, இலேசு படாது, புழுதிப் புகையைக் கண்டது. கேலி செய்து நகைப்பது போன்று மெல்லென, காற்று வீச ஆரம்பித்தது… காலடியினினறு கிளம்பிய ஒழுங்கான இடைவிடா சப்தம் ‘பாழ்பட்டு’ என்று ஒலித்தது. இலையற்ற கிளைகளில் சமைந்து நின்ற உருவமற்ற காற்று, ‘பாழ்பட்டு’ எனறு மனமுடைந்து ஒலித்து ஒடி, வீசும் காற்றுடன் கலந்தது. எட்டி நின்றபாழ்மண்டபம் மெளனமாகக் கேட்க அதைத் தாண்டிச்’ சென்றது…

எனனுடைய காரியமும் முடிந்துவிட்டது. எனனால் கூடுமானவரையில் சங்கரனைப் பற்றிய வாழ்க்கையை சொல்லிவிட்டேன். இந்நிகழ்ச்சி நான் அறிந்தது, என் மனதை எவ்வகையில் மாற்றிவிட்டது என்று என்னால் சொல்ல இயலவில்லை.

இன்றோடு என் ஒய்வு நாள் முடிகிறது. நாளை முதல் பழையபடி ஆபீஸ் அலுவல்கள்தான். பேனா பிடித்து ‘எழுது- எழுது’ என்று எழுத வேண்டும்

என் தலை எழுத்தையா மாற்றி எழுதப்போகிறேன். சீ சீ ! இல்லை. தலை எழுத்துதான் ‘எழுது எழுது’ என்று எழுதுகிறேன், பந்தம் சுற்றும் காற்றாடியின் கீழ் மண்டை வறள, ‘ ‘எழுது- எழுது- தான் ’ …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Muththarasi.org