கல்வியும் கல்லாமையும்

  1. கல்வியும் கல்லாமையும்

கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் ஒரு பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். மிகவும் சிறந்து விளங்கிய தமிழ்ப் பெருங்கவிஞர்.

ஒருநாள் மதுரையிலே நான் அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றூரிலிருந்து அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார்.

அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டு, ‘வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?’ -என்று கேட்டார்.

அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!’ என்றார்.

‘பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி’ என்று மறுபடியும் கேட்டார்.

வந்தவர் அதற்கும், திரும்பத் திரும்ப- ‘ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன் என்றே சொன்னார்.

கவிராஜர் சிறிது யோசித்து – சற்றுப் பேசி அனுப்ப எண்ணி,  ‘தங்களுக்குக் குழந்தை உண்டா?’ என்று கேட்டார்.

‘இருக்கிறான், ஒரே பையன்’ -என்றார் வந்தவர்.

‘என்ன படித்திருக்கிறான்?-என்று இவர் கேட்க-வந்தவர் ‘எங்கே படித்தான், ஒன்றும் படிக்கவில்லை’ என்று. சொல்ல, கவிஞர்- ‘என்ன செய்கிறான்?- என்று கேட்க, அவர் – ‘வீட்டிலே இரண்டு எருமைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று சொன்னார்.

உடனே கவிராயர் எழுந்து, அவரை எழச்செய்து, தட்டிக் கொடுத்து, வெளி வாயிற்படி வரை அழைத்துக் கொண்டு போய் நின்று, ‘இனி யாராவது உங்களுக்கு எத்தனை எருமைகள்’ என்று கேட்டால், ‘இரண்டு’ என்று சொல்ல வேண்டாம். மூன்று எருமைகள் உண்டு என்று சொல்லுங்கள்’ என்று சொல்லி அவரை வழியனுப்பி விட்டார்.
கல்லாமையின் இழிவைக் கவிஞர் உணர்த்தியது – காலம் பல கடந்தும் என் உள்ளத்தை விட்டு அகலவில்லை.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன்,

அறிவுக்கதைகள் நூறு நூலில் இருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Muththarasi.org