முக்கூடற் பள்ளில் கலகக்குரல்

முக்கூடற் பள்ளில் கலகக்குரல்

வை. அருட்செல்வி

                                            துணைப் பேராசிரியர்,அரசுக்கல்லூரி

                                            மூணாறு

தமிழ் இலக்கிய வரலாற்றில் காலந்தோறும் பல இலக்கிய வகைகள் தோன்றியுள்ளன.  செவ்வியல் இலக்கியங்கள், அறஇலக்கியங்கள், காப்பியங்கள் என அழியாப் புகழ்பெற்ற இலக்கிய வரலாற்றை உடையது தமிழ் இலக்கியம்.  அந்த வகையில் சிற்றிலக்கியமும் கருத்தாழம் மிக்க ஓர் இலக்கிய வகையாகும்.  பாட்டியல் நூல்கள் தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்களைப் பட்டியலிடுகின்றன. இவ்விலக்கிய வகை அமைப்பிலும், பாடுபொருளிலும் புதுமை உடையது.  எனவே தான் தொல்காப்பியர் புத்திலக்கிய வகைகளை “விருந்து” என்னும் வனப்பினுள் கொண்டு வந்துள்ளார்.

“விருந்தே தானும் புதுவது கிளந்தயாப்பின்மேற்றே”

                                  (தொல்.பொருள்.செய் -231)

     சங்க இலக்கியங்களும், காப்பியங்களும் புலமை இலக்கியங்களாகவே படைக்கப்பட்டன.  இருப்பினும் எளிய மக்கள் புரிந்து கொள்ளும் அளவு எளிமைப்படுத்தப்பட்ட பாடல்களும் இருக்கின்றது.  சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வரிப்பாடல்களை உதாரணமாகக் கூறலாம்.  சிற்றிலக்கியங்கள் காலம்வரை சாதாரண மக்களுக்கென்று முழுமையான இலக்கியங்கள் படைக்கப்படவில்லை என்றே கூறலாம்.  பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற சிற்றிலக்கியங்கள் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் நாடகத்தன்மை வாய்ந்த இலக்கிய வகையாகும். தொல்காப்பியம் எளிய மக்களுக்கான இலக்கிய வகையை “புலன்” என்னும் வனப்பினுள் கொண்டுவருகிறது.

      “சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து

       தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

       புலனென மொழிப் புலனுணர்ந்தோரே.”          (தொல் செய்.233)

இங்கு “சேரி மொழி” என்பது நேரடியாக உணரக்கூடிய சொற்களைக் கொண்டு இலக்கியம் படைப்பதாகும்.

கலகக்குரல் :

     காதலும், வீரமும் இருகண்களாகப் போற்றப்பட்ட தமிழ் மரபில், இன்று “காதல்” என்பது கண்டிக்கத்தக்க செயலாகக் கருதப்படுகிறது.  வீரம் அறமற்ற செயலாக மாற்றம் பெற்றுவிட்டது.  எனவே தான் “போர்த்தொழில் புரியேல்” என்று ஒளவையார் கூறியுள்ளார்.  இது கலகக்குரலின் தொடக்கம் என்று கூறலாம்.  தெய்வத்தையும், அரசர்களையும் கதைமாந்தர்களாகக் கண்ட காப்பியக் காலத்தில் இளங்கோவடிகள் படைத்த சிலப்பதிகாரம் ஒரு கலகக்குரல் தானே!.

     பாமர மக்களுக்காகப் படைக்கப்பட்ட சிற்றிலக்கியங்களில் “பள்ளு” இலக்கிய வகை உழவர் இலக்கியமாகவே போற்றப்படுகிறது.  சிற்றிலக்கியங்களின் இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் பள்ளு என்னும் இலக்கியத்திற்கான இலக்கணம் கூறப்படவில்லை உழத்திப்பாட்டு என்னும் இலக்கிய வகையே அறிமுகம் செய்யப்படுகிறது.

     “புரவலர் கூறி அவன்வாழிய வென்று

      அகல்வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனன்

      எனவரும் ஈரைந் துழத்திப் பாட்டே”         (பள்ளிருபாட்டியல்.216)

பள்ளு இலக்கிய நூல்களில் “முக்கூடற்பள்ளு” முதன்மையானதாகக் கருதப்படுகிறது.  புலவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களில் உள்ளத்து உணர்வுகள் வெளிப்படும்.  அந்த வகையில் முக்கூடற்பள்ளில் காலங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் விவசாயக் கூலிகளின் உள்ளுணர்வு அங்கதச் சுவையோடு கூடிய கலகக்குரலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கூடற் பள்ளு :-

     முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகர் மீது பாடப்பட்டதாகும்.  தாமிரபரணி நதியோடு சிற்றாறும், கயத்தாறும் கூடும் இடமே முக்கூடல் என வழங்கப்படுகிறது.  பள்ளன், பள்ளியர், குலப்பெருமைகளும், நாட்டுவளமும், நகர்வளமும் பாடப்பட்ட சிறப்பான நூல்.  தமிழர்களின் விவசாயத்தை புகழ்ந்து பாடிய நூல்.  இதில் கூறப்பட்டுள்ள, நெல்வகைகளும், மாடுவகைகளும், ஏர்வகைகளும், மீன்வகைகளும் நம்மை வியக்க வைக்கின்றன.  தமிழர் பண்பாடுகளை பறை சாற்றும் திருவிழாக்கள், தெய்வவழிபாடுகள் ஆகியவை போற்றுதலுக்குரியன.  இவ்வளவு சிறப்புக்களைப் பெற்ற முக்கூடற் பள்ளில் விவசாயிகளின் துன்பங்களை, வெளிப்படுத்தும் சிலக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது.

     உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறையை “மெய்ப்பாடு” என்கிறோம்.  தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாட்டினைக் கூறும் போது அவை தோன்றுவதற்கான காரணங்களைக் கூறுகிறது.  எண்வகை மெய்ப்பாட்டில் வெகுளி என்ற மெய்ப்பாடே கலகக்குரலின் வெளிப்பாடு என்றும் கூறலாம்.

     “உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன

      வெறுப்ப வந்த வெகுளி நான்கே”       (தொல். மெய்.254)

இதற்கு உரையெழுதிய இளம்பூரணர் உறுப்பறை, குடிகோள், அலை, கொலை “இப்பொருள் நான்கும்;, தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னை பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க” என்கிறார்.  இதில் குடிகோளாவது கீழ்வாழ்வாரை நலிதல் என்றும், அலை என்பது வைதலும், புடைத்தலும் ஆகும்.  முக்கூடற்பள்ளில் இந்த இரண்டு மெய்ப்பாடுகளே கலகக்குரல்களாக வெளிப்பட்டுள்ளன.

     உழைக்கும் மக்களால் தங்களது கோபத்தை நேரடியாகக் காட்டமுடியாது.  தன்னை அடிமைப்படுத்துபவர்களை  நையாண்டி செய்வதன் மூலம் அவர்களுக்கு மன அமைதி கிடைக்கிறது.  முக்கூடற் பள்ளில் உழவர்களின் கோபம் பள்ளன், பள்ளியர் வாயிலாக வெளிப்படுகிறது.  மருத நில வளங்களையெல்லாம் கூறிய ஆசிரியர் பண்ணைக்காரன் வருகையின் போது அவனின் தோற்றத்தை வருணணை செய்வதில் எள்ளல் கலந்த வெகுளி வெளிப்படுவதை உணரமுடிகின்றது. 

     நமக்குப் விருப்பமில்லாத ஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியாது.  இதைத்தான் பண்ணைக்காரனின் தோற்றத்திலும் காணமுடிகின்றது.  முக்கூடற் பள்ளு கூறும் பண்ணைக்காரன் தோற்றத்தை கற்பனை செய்து பாருங்களேன்.  நகைச்சுவை தோன்றும்.  பண்ணைக்காரனை நேரடியாக வசைமொழி கூறமுடியாத நிலையில் அங்கு அவனது தோற்றம் வசைபாடப்படுகிறது. இது ஒரு வகையான கலகக்குரலின் உத்தி என்றே கூறலாம் பண்ணைக்காரனின் தோற்றம்

     “மாறு கண்ணும் பருத்திப்பையின்

        கூரை வயிறும் – கீரை

      மத்துப்போல் தலையும் சுரை

        வித்துப்போல் பல்லும்

      நீறு போல் வெளுத்த உளளை

        யூறு நாசியும் – தட்டி

      நெரித்த மாங் கொட்டை போல் ஈ

        அறிந்த வாயும்

      தாறு மாறாய் மீசையில் அஞ்

        சாறு மயிரும் – தூங்கற்

                                      சண்ணைக் கிடாப்போல் நடையும்

        மொண்ணை முகமும்

      வேறு கீறி ஒட்ட வைத்த

        ஏறுகாதுமாய் – நேமி

      வீரனார் முக்கூடற் பண்ணைக்

        காரனார் வந்தார்.

வருணிக்கப்பட்டுள்ளது.  பண்ணைக்காரன் தலைமுதல் பாதம் வரை கூறப்பட்டுள்ள உவமைப் பொருட்களைப் பாருங்களேன்.  கண்கள் மாறுகண், வயிறு பருத்திப்பை, தலை கீரையைக் கடைவதற்குப் பயன்படும் மத்துப்போன்ற வழுவழு என்றிருக்கும் வழுக்கைத்தலை, சுரைவித்துப் போன்ற பெரிய பற்கள். ஊளைவடியும் மூக்கு, அவனுடைய வாயோ மாங்கொட்டைப் போன்றுள்ளது.  அதுமட்டுமா? மீசையில் ஐந்தாறு மயிர்கள் மட்டுமே உள்ளன.  அவனது நடையோ ஆட்டுக்கிடாய் நடப்பதைப் போன்றுள்ளது.  காதுகள் தனியாக வெட்டி ஒட்டவைத்ததைப் போன்று உள்ளது.  மொத்தத்தில் வடிவமற்ற முகத்தை உடையவன் என்று கூறப்பட்டுள்ளது.  தங்களை எப்பொழுதும் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் பண்ணைக்காரன் மீதான வெறுப்பினை வருணணை என்னும் வெளிப்பாட்டால் கலகக்குரல் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

     அடுத்ததாக பண்ணைக்காரனின் குணநலன்களைக் கூறுகிறார்.  பண்ணைக்காரர் மூத்த மனைவியான மூத்த பள்ளியின் முகம் பார்த்துச் சில சொற்களைப் பேசுவார்.  ஆனால் இளையபள்ளி பேசுவதைப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பார்; சாத்தி என்னும் பள்ளியின் மகளான காத்தியைத் தன்னுடைய பேத்தி என்று முறை கொண்டாடுவார்.  பின்பு மெதுவாய் அவளை நோக்கிச் சைகை காட்டி அப்புறமாய்க் களத்து மேட்டிற்கு வா என்று கூறுவார்; தூய்மையற்ற வாய்க்குப் புகை பிடிக்கத் தோன்றினால் புகையிலைக்கு நெருப்பு பற்றவைக்கச் சொல்வார்.   

      “காத்திராத பள்ளன் பர

        மார்த்தி என்பாராம் – குச்சிற்

       கண்ணைச் சாய்ப்பா ராம் முக்கூடற்

         பண்ணைக் காரனார்.

பண்ணைக்காரன் மீது உள்ள வெறுப்பினை அவனது தோற்றத்தின்; வாயிலாக குணநலன்களைக் கூறும் முறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  இது தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும்.  மேலும், பள்ளியரை வருணணை செய்யும் போது

     “உள்ளத்தி லூசலிடும் உல்லாசப் பார்வை விழிக்

        கள்ளத்தி னாலிரும்புங் கல்லுங் கரையாதோ

      வெள்ளத்தி லேதுயில்கார் மெய்யழகர் முக்கூடல்

        பள்ளத்தி யார் அழகு பார்க்க முடியாதே.”

பாற்கடலில் துயில் கொள்ளும் கருமை நிறமுடைய அழகர் கோயில் கொண்டிருக்கும் முக்கூடல் நகரில் வாழ்கின்ற பள்ளியர்களின் அழகு போல் வேறு எங்கும் பார்க்க இயலாது என்கிறார்.  பள்ளனின் வரவு கூறுமிடத்து “கறுக்குங்கிடாய் மருப்பின் முறுக்கு மீசையும்” என்று வருணித்துள்ளார்.  அவனை “வடிவழகக்குடும்பன்” என்கிறார்.      முடிவாக இலக்கியங்களில் சமகாலப் பிரச்சனைகளைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் உணர்த்தியுள்ளன.  பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட சிற்றிலக்கியங்களில் ஒன்றான முக்கூடற் பள்ளில் உழவர்களின் உணர்வுகளை வெகுளி என்னும் மெய்ப்பாட்டின் வாயிலாக கலகக்குரல் கொடுத்துள்ளார் ஆசிரியர் என்பதையும், அது பண்ணைக்காரனை வருணிப்பதன் வாயிலாக வெளிப்பட்டுள்ளது என்பதையும் இக்கட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Muththarasi.org