தயவு  செய்து  தற்கொலை  செய்துகொள்

“தயவு  செய்து  தற்கொலை  செய்துகொள்”

ப. கணேஷ்வரி,

தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர்,

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி.

இதனுள்…

                        காலந்தோறும் இலக்கியங்களின் பாடுபொருள்கள் மீதான பல பரிணாமங்கள் குறித்து ஆய்வுலகம் அறியும். சமூகம் எதைச் சுமக்கிறதோ அது படைப்பாக மிளிர்கிறது. அகம், புறம், இன்பம், துன்பம், அரசன், புலவன், மக்கள் என வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் குழுமம், தன்னுள் முரண்பட்டு இயங்கியதை வரலாறு பறைசாற்றும். “முரண்பாடு எங்கு வினையாற்றுகிறதோ அங்கு வினை மேம்படும்” என்பது ஹெகலின் வாக்கு. சமகால கவிதை இலக்கியம் சட்டென வார்த்தைகளால் சுட்டுவிடுகிறது. சமூகம், அரசியல், பண்பாட்டு வெளியென அனைத்திலும் பாரபட்சமின்றி வினையாற்றுகிறது. சமீபத்தில் “தயவு செய்து தற்கொலை செய்துகொள்” என்ற சுகிர்தராணியின் கவிதை இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. இது மதவாத அரசியலுக்கும் தீண்டாமைக்கும் எதிரான கலகக் குரல். நடப்பில் மிகத்தீவிரமான மொழிகளால் கலகக்குரல் எழுப்பி வரும் சுகிர்தராணியின் கவிதைகள் குறித்து காண்குவம்.

சுகிர்தராணி

                        சமகாலத் தலித் இலக்கியங்களில் முக்கியமான பெண் எழுத்தாளராக அறியப்படும் இவர் கவிஞரும், வேலூர் மாவட்டம் இராணிபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியரும் ஆவார். இவர் எழுதிய கவிதை நூல்கள்,

•                     கைப்பற்றி என் கனவு கேள்

•                     இரவு மிருகம்

•                     அவளை மொழிபெயர்த்தல்

•                     தீண்டப்படாத முத்தம்

•                     காமத்திப்பூ

என்பனவாகும். பெண் விடுதலை, பெண் உடல் அரசியல், தலித் விடுதலை என்ற தளங்களில் வீரியம்மிக்க மொழிகளால் கலகக்குரல் எழுப்புபவர்.

பெண் உரிமைக்குரல்

                        அடிப்படையில் பெண் தலைமையிலிருந்த சமூகம் பலபல காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்பட்டு முற்றிலும் பெண்ணை ஒற்றை நுகர்வுப் பொருளாய் ஆக்கிவிட்டது. பெண்களின் குழந்தைப்பேறு, மாதவிடாய், உடல் அமைப்பு குறித்த பல்வேறு நிலைகளைக் காரணம் காட்டியும் பெண்மையைப் போற்றுதல் என்ற மாயைக்குள் தவறாமல் அடக்குமுறையையும் கையாண்டனர். கவிஞர் சுகிர்தராணி எல்லாத்தரப்பு பெண்களைப்பற்றிப் பேசுவதைவிடவும் தலித் பெண்களுக்கான உரிமையையும் வலிகளையும் அதிகம் பேசுகிறார். அவரது நேர்காணல் ஒன்றில், “சமூக அளவில் தலித் பெண் என்கிற காரணத்தினால் புறக்கணிப்புக்கு ஆளாகினேன் என்றால், என் குடும்பத்துக்குள் பெண் என்கிற காரணத்தினால் அடக்குமுறைக்கு ஆளானேன்” என்று பதிவிடுகிறார். தலித் பெண்களின் பாலியல் ரீதியான கொடுமைகளை இவரது கவிதை அதிகமாகப் பேசுகிறது.

துள்ளும் வலியும்

மின்னலென வெட்டும் வேதனையும்

உச்சமாய் எரிகிற

உயிரை அசைத்து

இரத்த சகதியில்

மீண்டழுத குழந்தையின்

துணி விலக்கி

பெண்ணென முகம் சுழிப்பவனே

அன்று

என்மீது பரவியபோது

மனம் களித்தவன் நீதானே” (கைப்பற்றி என் கனவுகேள்)

பெண்களோடு பாலியல் இன்பம் துய்க்க விரும்பிய ஆண் அதிகார வர்க்கம், பெண் சிசு பிறப்பை அறுவெறுக்கும் அவலநிலையை இக்கவிதை உணர்த்துகிறது. பெண் குழந்தை சமூகத்தில் மதிக்கப்படவேண்டும் என்ற ஆதங்கக்குரலாக ஆணதிகாரத்தின் மீது ஒலிக்கிறது.

இடமற்று நிற்கும்

கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க

பேருந்துக்கு வெளியே பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்

காதலையா?” (கைப்பற்றி என் கனவுகேள்)

என்ற கவிதையில் இரக்கமற்ற ஆணின் காதலை மிகச்சாதாரண மொழியில் கேள்விக்குரல் எழுப்புகிறார்.

உடல் அரசியல் மொழி

                        ஆதித் தமிழர் மரபாக எத்திறத்தானும் பெண் தான் கொண்ட காம இச்சையை வெளிப்படுத்தக் கூடாதென்பது பின்பற்றப்பட்டு வருகிறது. ஆயினும் வரலாற்றில் ஒளவையார், ஆண்டாள் போன்றோர் வெளிப்படுத்தக் காண்கிறோம். சுகிர்தராணி மரபுவழிப்பட்ட காதலைச் சிதைத்தும், உடலை மையப்படுத்தியும், தமிழ்ச் சமூகம், ‘பெண்கள் இதைப் பேசவே கூடாது’ என்று நம்பப்பட்ட பாலியல் உறுப்புக்களையும் பற்றி கவிதை மொழிகிறார். ஒடுக்கப்பட்ட உடலினை மையமாகக் கொண்ட புலன்உணர்வுகளைக் கவிதையில் கொண்டாடி மகிழ்கிறார்.

என் கிராமத்தின் தேகமெங்கும்

வர்க்கத்தின் இருள் கவிந்திருக்க

அச்சமூட்டும் துரோகியின் குறுவாளைப்போல

பிசிரின்றி எரிந்துகொண்டிருக்கிறது இரவு

…..

வீட்டின் முற்றத்தில் நிர்வாணமாய்க் கிடத்தப்பட்டிருக்கிறேன்

கால்களும் கட்டப்பட்டிருகின்றன.

….

ஆதிக்கத்தின் கருந்திரவத்தைப் பருகியவர்கள்

என் யோனியில் பள்ளம் பறித்துப்

பருத்த கம்பொன்றை நிறுத்துகிறார்கள்

வழிந்தோடிய வன்மத்தின் கால்வாயில்

வீசப்படுகிறது என் உடல்

….

யோனியில் ஊன்றிய கம்பின்உச்சியில்

குருதியின் நிறத்தோடு பறக்கும்

எம் விடுதலையின் பதாகை.”

என்ற கவிதை மறைத்து வைக்கப்பட வேண்டிய பெண் பாலுறுப்பை அப்பட்டமாய் மொழிகிறது. இன்றும் பெண் தனக்காக குரல் எழுப்ப முடியாத சூழல் நிலவும் சமூகத்தை மையமாக்கி கற்பனையின் உச்சத்தில் பெண்விடுதலைப்பற்றி பேசுவதாய் அமைகிறது இக்கவிதை.

எங்கள் ஆடைகளை  அவிழ்ப்பீர்

அம்மணமாக்குவீர்

வன்புணர்வீர்

தமையனோடு புணரச்செய்வீர்

இனி எவையும் மிச்சமில்லை

நீங்கள் செய்வதற்கு

ஆனால்

நான் செய்ய ஒன்றுண்டு

அது கொலையும் செய்வாள் பறச்சி

என்ற கவிதை பெண்கொடுமையின் உச்சம். ஒவ்வொன்றிற்கும் எதிர்விசை உண்டென்பது இங்கு கொலைவெறித்தன்மையாக மாறியிருக்கிறது.

தலித் – எதிரொலி

                        மனித சமூக வரலாற்றில் பல கட்டங்களைக் கடந்து 21-ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தாலும் இன்றும் எங்கோ ஓர் மூலையில் சாதிய வெறி தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கின்றது. படைப்பாளன் வேறொன்றாக இருந்துகொண்டு ஒன்றைப் பேசுவதற்கும், அதுவாகவே இருந்துகொண்டு அதனைப் பேசுவதற்கும் நுட்பமான வேறுபாடுண்டு. கவிஞர் சுகிர்தராணி தலித்தாக இருந்து கொண்டு அவர்களின் ஒடுக்குமுறைபற்றி எழுப்பும் குரல் உண்மையில் வீரியமிக்கதாய்ப்படுகிறது.

                        தயவு செய்து தற்கொலை செய்துகொள்

                        நாங்கள் சமையலராக இருக்கிறோம்

                        நாங்கள் சமைத்த உணவு உனக்கு வேண்டாமெனில்

                        தயவு செய்து தற்கொலை செய்துகொள்

என்ற சமீபத்திய கவிதை தற்கால அரசியல் சாதிக் கொடுமைக்கான எதிர்ப்புக் குரலாக ஒலிக்கிறது.

செத்துப்போன மாட்டைத்

தோலுரிக்கும்போது

காகம் விரட்டுவேன்

வெகுநேரம் நின்று வாங்கிய

ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு

சுடுசோறெனப் பெருமைபேசுவேன்

……

தோழிகளற்ற பின்வரிசையில் அமர்ந்து

தெரியாமல் அழுவேன்

இப்போது

யாரேனும் கேட்க நேர்ந்தால்

பளிச்சென்று சொல்வேன்

பறச்சி என்று.”

பல நிலைகளில் ஒரு தலித்பெண்ணின் ரணங்களை உணர்த்தினாலும் இன்று இவ்வாறெல்லாம் போர்க்குரல் எழுப்புவதற்கான துணிச்சலை வாசகருக்கு விட்டுச் செல்றது இக்கவிதை.

இதனால்…

                        சமகாலத்தில் தன் இனம், மொழி, பண்பாட்டு உரிமைக்காக எவற்றையும் எதிர்த்துக் கலகக்குரல் எழுப்பும் சுதந்திரம் வாய்க்கப்பெற்றாலும் மறைமுகமாக எதிர்க்குரல் எழுப்புவோர் தாக்கப்படும் அவலமும் அரங்கேறி வருகிறது. “எனக்கான ஆயுதத்தை என் எதிரியே தீர்மானிக்கிறான்” என்ற மாவோவின் கூற்றுப்படி சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படும் பெண்ணடிமை, உடல் அரசியல், தலித் வன்கொடுமை ஆகியவை இந்த அதிகார வர்க்கத்தின் வழி பெற்ற கலகக்கரல்களே என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Welcome to Muththarasi.org